யாமறிந்த மொழிகளிலே

எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

இப்படி ஒரு கேள்வி கேட்க வேண்டுமா? இலங்கை படுகொலைக்கு இலங்கை ராணுவமும் , நாடகமாடும் இந்திய அரசியல்வாதிகளும் தான் காரணம் என நீங்கள் சொல்லலாம். ஆனால் இதுவரை யாரும் விடுதலை புலிகளை குறை சொல்வது இல்லை. இத்தனை மக்கள் கொன்று குவிக்கப்படுவதை விடுதலை புலிகள் நினைத்து இருந்தால் தடுத்து நிறுத்தி இருக்க முடியும். 

அவர்கள் தோற்க போகிறோம் என தெரிந்த பிறகாவது சரண் அடைந்து இருந்தால் பல்லாயிர கணக்கான உயிர்களை காப்பாற்றி இருக்கலாம். "அவர்கள் எப்படி சரண் அடைய முடியும்? அவர்கள் தன்மானம் உள்ளவர்கள் சாகும் வரை போராடுவார்கள்" என நீங்கள் சொல்லலாம். எப்படி சரண் அடைவது விடுதலை புலிகளுக்கு தன்மான பிரச்சனையோ அது போல் தான் போரை நிறுத்துவதும் இலங்கை அரசுக்கு தன்மான பிரச்சனை. இவர்களின் தன்மான பிரச்சனைக்காக கொல்லப்ப்படுவது அப்பாவி தமிழ் மக்கள். ஆகவே இந்த படுகொலைகளுக்கு இலங்கை அரசு எவ்வளவு காரணமோ அதே அளவு விடுதலை புலிகளுக்கும் பங்கு உள்ளது. 

நான் விடுதலை புலிகளை தீயவர்கள் என்றோ அவர்கள் போராட்டம் அர்த்தம் அற்றது என்றோ கூறவில்லை. விடுதலை புலிகளின் தனி ஈழ போராட்டம் கட்டாயமாய் தமிழர்களுக்கு நல்ல தீர்வை தரும் என நானும் நம்புகிறேன். ஆனால் நம் போராட்டம் பெரிதா அல்லது நாம் யாருக்காக போராடுகிறோமோ அந்த மக்களின் உயிர் பெரிதா என நினைத்தால் எந்த ஒரு போராளியும் தன் மக்களுக்காக தன் போராட்டத்தை விட்டுக்கொடுப்பான். தமிழ் மக்களை எல்லாம் இலங்கை அரசு கொன்று குவித்த பிறகு விடுதலை புலிகள் யாருக்காக போராட போகிறார்கள்?  

ஒரு போராட்டத்தின் போது கடைசி போராளி இறக்கும் வரை போராடுவது அர்த்தமுள்ளது. ஆனால் கடைசி தமிழன் இறக்கும் வரை போராடுவது அர்த்தமற்றது. போராளிகளும் ராணுவ வீரர்களும் தங்கள் உயிரை பணயம் வைத்துவிட்டு தான் போருக்கு செல்கிறார்கள். ஆனால் அப்பாவி மக்கள், சாக விருப்பம் இல்லாதவர்களை போரில் கொள்வது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. அவர்களை கொள்ளும் இலங்கை ராணுவமும் அவர்கள் சாக காரணமாய் இருக்கும் விடுதலை புலிகளும் சிந்திக்க வேண்டும். 


இந்த போரின் முடிவில் வெற்றி பெற்றவர்களை வரலாறு கொண்டாடுமா என தெரியாது. ஆனால் அப்பாவி மக்களின் உயிரை காப்பாற்ற தங்களின் தன்மானத்தை விட்டுக்கொடுத்து யார் போரை நிறுத்தவோ சரணடையவோ முன் வருகிறார்களோ அவர்களை கண்டிப்பாக இந்த உலகம் போற்றி கொண்டாடும். தமிழ் மக்கள் மேல் அக்கறை உள்ள விடுதலை புலிகள் முன்வருவார்களா?

என்னை பொறுத்தவரை எந்த ஒரு கொள்கையும் ஒரு உயிரை விட உயர்ந்தது இல்லை.


1 comments:

Cable சங்கர் said...

ரைட்டு.. ஆரம்பமாகட்டும்