யாமறிந்த மொழிகளிலே

எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

Nov 19, 2014

தாத்தா

தாய் கொடுத்த தாய்ப்பாலு
இப்போ எனக்கு நினவில்ல
தாத்தா நீ ஊட்டுன சோறு
நெஞ்சு குழியில் நிக்குதையா

சின்ன வயசுல தாய் மடியில்
தூங்கியதா எந்த நினப்பும் இல்ல
தாத்தா உன் தோளில் நீ தட்டி
தூங்கியது மனச விட்டு நீங்கலையே

சாமி வந்து சொல்லுச்சுன்னு
மீனும் கறியும் நீ விட்ட
என் சாமி உனக்காக தானே
அதையெல்லாம் நானும் விட்டேன்

கோடி கணக்குல சொத்து
வச்சிட்டு போகவில்ல.. ஆனா
அன்பையும் ஒழுக்கத்தையும்
கத்து கொடுத்துட்டு போயிருக்க

உன் கடைசி காலத்துல 
வயசான உடம்பு தானே
வயித்தியம் போதுமுன்னு
பாவிப்பய நெனசுட்டனா

ராசா போல என வளத்தியே
உன் இறுதி ஊர்வலத்துல
உன்ன ராசப்போல் நான்
அனுப்பி வைக்கலையோ

நாங்க நல்லா இருந்தா நீ
நல்லா இருப்பனு சொல்லுவியே
நாங்க ரொம்ப நல்லா இருக்கையிலே
எங்கள விட்டு ஏன் போன

தாய விட்டு பிரிச்சா குழந்த அழுமாம்
ஆனா நான் அழமாட்டேன்
பிரிப்பது நீயா இருந்தா.. இப்போ
நீயே என்ன பிரிஞ்சு போயிட்டியே


முதல் மாத சம்பளத்திலேயே அப்பாவை மிஞ்சினான்
சம்பள உயர்வுகளில் அப்பப்பா சொல்ல வைத்தான்

பீட்சாவும்  பர்கரும் இல்லாமல் வாழ மறுத்தான்
இட்லியும் தோசையும் என்னவென்று கேட்டான்

மாதம் ஒருமுறை மேலாடை வாங்கினான்
வெளிநாட்டு தரத்தில் உள்ளாடை வாங்கினான்

23 வயதில் சொந்த வீடு வாங்கினான்
தவணை முறையில் சிற்றுந்தும் வாங்கினான்

வெள்ளையனை விட அழகாக அங்கிலம் பேசினான்
அமெரிக்கனுக்கே வியாபாரத்தில் வகுப்பு எடுத்தான்

எல்லாம் கிடைத்த மென்பொறியாளன்
ஏனோ smileyல் :) மட்டுமே சிரிக்கிறான்



அலை என்னும் கையால் என்னை அழைத்தாய்

நான் இன்னும் காதலிக்கவில்லை



பள்ளி பருவத்தில் ஒரு பெண்ணின் மீது
ஈர்ப்பு வந்ததே அது காதலா ?

கல்லூரி நாட்களில் ஒரு பெண்ணை மட்டும்
மிகவும் பிடித்ததே அது காதலா ?

வேலையில் சேர்ந்த போது ஒரு பெண்ணின் மேல்
பாசம் வந்ததே அது காதலா ?

அறிவு முதிர்ந்த போது ஒரு பெண்ணிடம்
நல்ல நட்பு மலர்ந்ததே அது காதலா ?

எது காதல் என்று புரியும் முன்பே
திருமணத்தை புரிந்து கொள்ள சொன்னார்கள்


குடும்ப சண்டையில்
இரு குடும்பத்தினர் கொல்லப்பட்டனர்

ஊர் சண்டையில்
இரு ஊரை சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டனர்

சாதி சண்டையில்
இரு சாதியினர் கொல்லப்பட்டனர்

மத சண்டையில்
இரு மதத்தினர் கொல்லப்பட்டனர்

உலக போரினில்
சில நாட்டினர் கொல்லப்பட்டனர்

நல்ல வேளை எங்கும்
மனிதர்கள் கொல்ல படவில்லை


பெரியாரை வழிபடுபவர்கள்
நாத்திகவாதிகள்

பெரியார் சொன்னதை ஏன் எதற்கு
என கேட்காமல் பின்பற்றுபவர்கள்
பகுத்தறிவாதிகள்

தன் மனைவியையும் பெண்ணையும்
தனக்கு சமமாக நடத்தாதவர்கள்
பெண்ணியவாதிகள்

சாதி பார்த்து
வரதட்சணை வாங்கி நடத்துவார்கள்
சுயமரியாதை திருமணத்தை

தன தேவைக்காக
கூன் விழும் வரை குனிவார்கள்
சுயமரியாதைவாதிகள்

பெரியார் பிறந்த பூமியில் இன்றும்
இரட்டை குவளை முறையும் ஜாதி கலவரங்களும்
நடப்பதை வேடிக்கை பார்பவர்கள்
பெரியாரிஸ்ட்கள்


எவருடைய அழுகையோ
ஒப்பாரியோ  கூட
என்னை சலனப்படுதியதில்லை


ஆனால் ஏனோ
ஊனமுற்றவர்களின் சிரிப்பு
என்னை கலங்க வைக்கிறது


Jan 6, 2011

கருணை

ஒத்த ரூபா பிச்ச போட்டு 
ஒலக வருமைய 
ஒழிசுட்டாராம் 


கார்கில் நிதிக்கு 
காசு கொஞ்சம் கொடுத்து 
காஷ்மீர காத்துட்டாராம் 


கமலா அறக்கட்டளைக்கு
காசு கொடுத்து ஒலக 
கல்வி கண்ண தொரந்துட்டாராம் 


எப்ப புரிய போகுது 
எவ்வளவு பணம் கொடுத்தாலும் 
எவனும் தெரேசா ஆக முடியாதுன்னு 


அள்ளி பணத்த தர்றதில்ல 
ஆசையா அனைக்கறது தான் 
அக்மார்க் கருணைன்னு 



கேட்டால் தான் கிடைக்கும்
தட்டினால் தான் திறக்கும்

கை ஏந்தினால் தான்

வரம் கிடைக்கும்
காலில் விழுந்தால் தான்
நல்லது நடக்கும்

என்றால் வேண்டாம்

எனக்கு கடவுள்


தன் கணவன் தன் மேல் 
பைத்தியமாய் இருந்தால் பிடிக்கும் 
தன் மகன் அவன் மனைவி மேல்
பைத்தியமாய் இருந்தால் பிடிக்காது 


தன் மகன் தன்னை 
கவனித்து கொண்டால் பிடிக்கும் 
தன் கணவன் அவன் தாயை 
கவனித்தால் பிடிக்காது 


தன் சகோதரன் தனக்கு 
உதவினால் பிடிக்கும் 
தன் கணவன் அவன் சகோதரிக்கு 
உதவினால் பிடிக்காது 


தன் கணவன் தன் பெற்றோர் 
சொல் கேட்டு நடந்தால் பிடிக்கும் 
தன் மகன் அவன் மாமனார்
சொல் கேட்டு நடந்தால்  பிடிக்காது 


தன் கணவனின் நண்பன் தங்களுக்கு 
உதவி செய்தால் பிடிக்கும் 
தன் கணவன் அவன் நண்பனுக்கு 
உதவி செய்தால் பிடிக்காது 


ஆகமொத்தம் பெண்ணை 
புரிந்து கொள்ள முடியும் 
அனால் 
புரிந்து கொள்ள முடியாது



புள்ளி வைத்தவள்
கணவன் கூப்பிட்டு போனாளோ
காணாமல் போனாளோ


கோலமாக காத்திருக்கும்
நட்சத்திரங்கள்



கல்வி ஒரு மனிதனுக்கு

பகுத்தறிவை புகுத்தும்

நாகரீக வாழ்க்கை
மூட நம்பிக்கையை ஒழிக்கும்

உலகமயமாக்கல்
சாதிகளை மறக்கடிக்கும்

என் நம்பிக்கை எல்லாம்
பகல் கனவானது

Orkutல் சாதி சங்கங்களை பார்த்த பின்பு





தன் காதலியை கவர

கண் தெரியாதவர்க்கு உதவும் காதலன்

தன் வருமான வரியை குறைக்க
நன்கொடை தரும் பணக்காரன்

தன் ரசிகர் மன்றம் பெருக
ஊனமுற்றோருடன் நடனமாடும் நடிகன்

தன் கட்சிக்கு ஓட்டு வேண்டி
மூன்று சக்கர வண்டி தரும் அரசியல்வாதிகள்

தன் பாவத்தை கழுவ
சேவை செய்யும் பாவிகள்

ஊனமாய் படைத்த கடவுள்
தினமும் எங்களை ஊனமாக்கும் மனிதர்கள்



(இது கலைஞரை பற்றி இல்லை.. அட நெசமாத்தான் )

இவர்களுக்கு
நரகாசூரன் என்ற அரக்கனை
கொன்றால் மூடநம்பிக்கை

இறந்தவர் மூன்று நாட்களுக்கு பின்
உயிர்தெழுந்தால் பகுத்தறிவு

அம்மன் கோவிலில் கூழ்
ஊற்றினால் பழிப்பார்

நோம்பு கஞ்சு வைத்தால்
முதல் ஆளாய் போய் நிற்பார்

தீ மிதிப்பதையும் அலகு
குத்துவதையும் நகைப்பார்

உயிர்த்து எழ வைக்கும் கூட்டம்
பற்றி வாய் திறக்க மாட்டார்

தீபாவளி, விநாயகர் சதுர்த்தியை
மற்றொரு விடுமுறையாய் பார்ப்பவர்

ரம்ஜான் கிறிஸ்துமஸ் வாழ்த்து 
செய்தி சொல்ல மறப்பதில்லை

பகுத்தறிவின் முழு இட ஒதுக்கீட்டை
ஒரே மதத்துக்கு அளித்து விட்டனர்

நாளையே ஹிந்து மக்கள்
சிறுபான்மையினராய் மாறினால்
ராமரை புகழ்ந்து கவிதை வரலாம்
பகுத்தறிவு பாசறையில் இருந்து

இவர்களுக்கு முக்கியம்
மக்களின் பகுத்தறிவும் இல்லை
அனைவருக்கும் சமஉரிமையயும் அல்ல 
தேவை எல்லாம் ஓட்டுகள் ஓட்டுகள் மட்டுமே !!!


இது கவிதை தான் நம்புங்க :)


அர்ச்சனை
=========
கோவில் அர்ச்சனை வரிசையில்
ஏமாற்றி நடுவில் புகுந்து
நமட்டு சிரிப்பு சிரித்து
சண்டை போட்டு உள்ளே சென்று
கடவுளிடம் வேண்டினார்
சாமி எனக்கு நல்ல புத்திய கொடு


Jan 18, 2009

சூரியன்


சூரியன்
=======


அழகிய நிலா
நிலா முகம்
என நிலவின் அழகை
ஆராதிக்கும் எந்த கவிஞனும்
என் அழகு சூரியன்
கடலில் கரையும் பேரழகை
கண்டிருக்க வாய்ப்பில்லை


பிற்படுத்தப்பட்டோர்
=====================
சாலை மறியல் செய்தனர்
கடைகளை சூராடினர்
பேருந்துகளை நொறுக்கினர்

தங்கள் சாதியை
பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் இருந்து
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பிற்கு
மாற்ற சொல்லி

குரங்குகளுக்கு அதிக சலுகை
என அறிவிப்பு வந்தால்
தங்கள் சாதியை
குரங்கு சாதியாய் அறிவிக்க சொல்லி
போராடினாலும் ஆச்சர்யம் இல்லை

மிகவும் பிற்பட்டு போனது
அவர்கள் சாதி மட்டும் அல்ல
மனித இனமும் தான்


தீவிரவாதிகள்
===============




சாமியார்களை சாமியாய்
பார்ப்பதை நிறுத்துவோம்

வேலைக்காரர்களை அடிமையாய்
பார்ப்பதை நிறுத்துவோம்

நடிகர்களை முதல்வராய்
பார்ப்பதை நிறுத்துவோம்

தீவிரவாதிகளை ஒரு மதத்தினராய்
பார்ப்பதை நிறுத்துவோம்

மனிதனை இனியாவது மனிதனாய் பார்ப்போம்


பத்து மாதம் கழித்து
வெறும் கையோடு சென்றாலும்
பாசமாய் வாலாட்டும் நாய்

சிகப்புக்கல் மோதிரம் போட்டால்
சிறப்பாக செழிப்பாக வாழலாம்
என நம்பும் மனிதன்

யாருக்கு ஆறறிவு ?

நிலநடுக்கம் சுனாமி என
அனைத்தையும் முன்கூட்டியே
அறியும் பறவைகள்

கழிவறை கிழக்கு நோக்கி இருந்தால்
கல்யாணம் விரைவாய் நடக்கும்
என நம்பும் மனிதன்

யாருக்கு ஆறறிவு ?


மதம் வேண்டாம்
==================

ஹிட்லரின் பெயரால்
கொலை செய்யப்பட்டதை விட
அதிகமாய் கடவுளின் பெயரால்
கொன்று குவித்த
எந்த மதமும் வேண்டாம் எனக்கு

மனிதனை உயர்ந்தோர் தாழ்ந்தோர்
என்று பிரித்து மகிழும்
எந்த மதமும் வேண்டாம் எனக்கு

மனிதன் செய்யும் பாவத்தை
காணிக்கை பரிகாரம் மூலம் மன்னிக்கும்
எந்த மதமும் வேண்டாம் எனக்கு

பெண்ணடிமை போற்றி வன்முறை வளர்த்து
மூடநம்பிக்கை தீயை மூட்டும்
எந்த மதமும் வேண்டாம் எனக்கு

அன்பை விட கடவுள் தான் பெரிது
என்று சொல்லும்
எந்த மதமும் வேண்டாம் எனக்கு